திருச்சி காமாட்சி அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி
திருச்சி காமாட்சி அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றது.
மலைக்கோட்டை, ஜூன்.29-
திருச்சி சத்திரம் பஸ்நிலைய பகுதியில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் முடிந்ததும், கோவில் நடையை பூசாரி பூட்டிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் நேற்று அதிகாலை கோவிலுக்கு சென்று பார்த்த போது, கோவிலின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார் அப்போது, கோவிலில் பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை. உடனே, இதுபற்றி கோவில் செயல் அதிகாரி நித்யாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.