கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி
இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்றார்.
இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்றார்.
தள்ளுவண்டி வியாபாரி
பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி ஊராட்சி ரெட்டியூரை சேர்ந்தவர் ராஜா (வயது65). தள்ளுவண்டி வியாபாரி. இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ராஜா திடீரென பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் அவரிடம் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இலவச வீட்டுமனை
இதையடுத்து முதியவர் ராஜா கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், கடந்த 2000-ம் ஆண்டு ரெட்டியூரில் 3 சென்ட் இலவச வீட்டுமனை எனது மனைவி சித்ரா பெயரில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் நாங்கள் குடிசை அமைத்து வசித்து வருகிறோம். இந்த நிலையில் தர்மபுரி-ஓசூர் 4 வழிச்சாலை அமைப்பதற்காக எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் கொடுத்த 3 சென்ட் நிலத்தை அதிகாரிகள் எடுத்து கொண்டனர்.
இது தொடர்பாக எனக்கு மாற்று இடம் வேண்டும் என பலமுறை பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டுமனையும், அதில் குடியிருக்க வீடும் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.