உடலில் மண் எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். இதையொட்டி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லும் பொதுமக்களை சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.
தீக்குளிக்க முயற்சி
இதற்கிடையே கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே திடீரென்று ஒருவர் பாட்டிலில் இருந்த மண் எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று அவரை காப்பாற்றினார்கள்.
பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி அமர வைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கோவையை அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பூச்சியூர் ரோட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான முத்துராஜ் (வயது 53) என்பதும், அவருக்கு சொந்தமான 1½ சென்ட் நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதும் தெரியவந்தது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இது தொடர்பாக முத்துராஜ், பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துராஜ், தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
மண் எண்ணெய் உடலில் ஊற்றப்பட்டதால், அவரை சிகிச்சைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் முத்துராஜிக்கு போலீசார் தக்க அறிவுரை வழங்கியதுடன், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.