காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை வெட்டி கொல்ல முயற்சி

தேனி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில், காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய மாணவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-29 01:30 GMT

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த 55 வயது இரும்பு வியாபாரிக்கு, மனைவி மற்றும் 16 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். மகள் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கடந்த 26-ந்தேதி இரவு இரும்பு வியாபாரி பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்று விட்டு ேமாட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரும்பு வியாபாரி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகள் உள்பட 4 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து இரும்பு வியாபாரியின் மனைவி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகளும் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத்தெருவை சேர்ந்த அழகுமலை மகன் முத்துகாமாட்சி என்ற வாழவந்தான் (23), மூர்த்தி மகன் செல்வகுமார் (23), லட்சுமிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் இரும்பு வியாபாரியின் மகளையும் போலீசார் கைது செய்தனர்.

காதல் விவகாரம்

கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இரும்பு வியாபாரியின் மகள் கடந்த ஆண்டு ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த போது, ஒருவரை காதலித்து பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தந்தை கண்டித்து அடித்துள்ளார். இதனால், அவருடைய பாட்டி, சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் சிறுமியை தங்க வைத்தார். அப்போது சிறுமிக்கும், கார் டிரைவரான முத்துகாமாட்சி என்ற வாழவந்தானுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இந்த விவரம் தெரியவந்ததால் சிறுமியின் பெற்றோர் முத்துகாமாட்சியை கண்டித்தனர். பின்னர் சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துகாமாட்சி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த இரும்பு வியாபாரியை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்று விட்டார். இதற்கிடையே அந்த சிறுமி மற்றொரு பள்ளியில் பிளஸ்-1 சேர்க்கப்பட்டார். அப்போது சிறுமி செல்போன் பயன்படுத்துவதை கண்டுபிடித்த பெற்றோர், அதன் மூலம் முத்துகாமாட்சியுடன் மீண்டும் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்து கண்டித்தனர்.

பரபரப்பு

இதனால், சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து தனது தந்தையை தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டத்தின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரும்பு வியாபாரியை முத்துக்காமாட்சி தனது நண்பர்களான செல்வகுமார், கண்ணப்பன் ஆகியோருடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும் இதற்கான சதி திட்டத்தை மாணவி, தனது காதலனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து செயல்படுத்தியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 4 பேரிடமும் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சிறுமியை சிறார் பல்நோக்கு சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற 3 பேரையும் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

பெற்ற தந்தையை தீர்த்துக்கட்ட மகளே காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்