பெண்ணிடம் ரூ.5 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
பல்லாவரத்தில் பெண்ணுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலத்தை அபகரிக்க முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.;
நில அபகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிகால், குபேர நகர், 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷினி (வயது 53). இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ஜமீன் பல்லாவரம் சிவசக்தி அவென்யூவில் தங்களுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 4½ கிரவுண்ட் நிலத்தை, 20 வருடங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, சுற்றுச்சுவர் கட்டி பராமரித்து வந்தோம். இந்த நிலையில் கீழ்க்கட்டளை வேலுசாமி நகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் ஏழுமலை (55) என்பவர், நிலத்தை அபரிக்கும் நோக்கில் சுற்றுச்சுவரை இடித்து, வேறோரு இரும்பு கேட்டை வைத்து, உரிமையாளரான எங்களை அங்கு செல்லாதவாறு தடுத்து வருகிறார்.
கைது
நிலத்தில் பதித்திருந்த தூண்களையும் உடைத்து சேதப்படுத்தி விட்டார். இதையறிந்து, நேரில் சென்று ஏழுமலையிடம் கேட்டபோது எங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, நிலத்தை கேட்டு மீண்டும் வந்தால் உயிரோடு விடமாட்டேன் எனவும் மிரட்டியதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, புகார் தொடர்பாக, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பல்லாவரம் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இது தொடர்பாக ஏழுமலையை கைது செய்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
விசாரணையில், கைது செய்யப்பட்ட ஏழுமலை (55), செஞ்சி அருகே உள்ள வல்லம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்பதும், கீழ்க்கட்டளையில் திருமண மண்டபம் நடத்தி வருவதும் தெரியவந்தது இதற்கிடையே திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள இடத்தை நில உரிமையாளர்கள் அனுமதி இல்லாமலேயே திருமண மண்டபத்திற்கு கார் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்ததும், நில உரிமையாளர்கள் இதைக் தட்டி கேட்டபோது அவர்களை மிரட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஏழுமலையை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.