நர்சை ஆட்டோவில் கடத்த முயற்சி

திருக்கோவிலூரில் நர்சை ஆட்டோவில் கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-29 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரை சேர்ந்தவர் 21 வயதுடைய இளம்பெண். இவர் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்ததும் மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோவை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள மதுராம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஜயகுமார் (வயது 23) என்பவர் ஓட்டினார்.

திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்த விஜயகுமார் திடீரென ஆட்டோவை சங்கராபுரத்துக்கு செல்லும் சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்,ஆட்டோ ஏன் சங்கராபுரம் சாலையில் செல்கிறது என்று கேட்டதோடு, உடனே ஆட்டோவை நிறுத்துமாறு விஜயகுமாரிடம் கூறினார். ஆனால் அவர் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றார்.

கைது

இதில் பதறிய அந்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பித்தார். இதையடுத்து விஜயகுமார் ஆட்டோவுடன் தலைமறைவாகி விட்டார். இதனிடையே ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்த பெண், சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சை ஆட்டோவில் கடத்த முயன்றதாக கூறி விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகுமார் மீது மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்