வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு

கூடலூர் அருகே வியாபாரியை தாக்கி பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-04 18:45 GMT

சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). கவரிங் நகை வியாபாரி. கடந்த 2-ந்தேதி இவர், கூடலூர் அண்ணாநகர் பகுதியில் புதிய கவரிங் நகைகளை விற்பனை செய்து வந்தார். பின்னர் அவர் அங்குள்ள கழிப்பறைக்கு சென்றுவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற கூடலூர் 1-வது வார்டு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த அருண் (21), 8-வது வார்டு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த சுராஜ் (23), பாண்டியன் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து முருகனை மறித்து அவரை கைகளால் தாக்கினர்.

பின்னர் அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.500-ஐ பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் முருகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து அருண், சுராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். தப்பி ஓடிய பாண்டியனை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்