வக்கீல் மீது தாக்குதல்

வடமதுரை அருகே வக்கீலை தாக்கிய அ.ம.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-19 16:21 GMT

வடமதுரை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் அபிமன்யு (வயது 57). வக்கீல். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் வேலாயுதம்பாளையத்தில் நடந்த முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உண்டியல் பணத்தை எண்ணும் பணி  நடந்தது. அதில் கலந்துகொண்டு விட்டு அபிமன்யு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஈஸ்வரன் (50), அவருடைய மனைவி முருகேஸ்வரி (37), உறவினர் கந்தசாமி (55) ஆகியோர் அபிமன்யுவை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அபிமன்யுவை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அபிமன்யுவுக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் அபிமன்யு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தார். ஈஸ்வரன், முருகேஸ்வரி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான கந்தசாமி, அ.ம.மு.க கட்சியின் வடமதுரை வடக்கு ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்