ஆக்கிரமிப்பை அகற்றிய நகராட்சி பணியாளர்கள் மீது தாக்குதல்
பழனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிய நகராட்சி பணியாளர்கள் 2 பேரை டீக்கடைக்காரர் சரமாரியாக தாக்கினார்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
பழனி நகரின் மைய பகுதியில் வ.உ.சி. பஸ் நிலையம் உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் ஒட்டன்சத்திரம், நெய்க்காரப்பட்டி பகுதிக்கு செல்லும் டவுன் பஸ்களும், மேற்கு பகுதியில் மதுரை, கோவை, தேனி பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பஸ்களுக்குமான நடைமேடை உள்ளது. வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் பழனி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இதற்கிடையே பழனி பஸ் நிலைய நடைமேடையில் கடைக்காரர்கள் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு பயணிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற ஆணையர் கமலா உத்தரவிட்டார்.
பணியாளர்கள் மீது தாக்குதல்
அதன்பேரில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பழனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் பல கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக்கொண்டனர்.
இந்தநிலையில் தேனி பஸ்கள் நிற்கும் நடைமேடை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு டீக்கடை வைத்திருந்த ஒருவர், ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் திடீரென்று அந்த டீக்கடைக்காரர், நகராட்சி பணியாளர்கள் 2 பேரை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்த சக பணியாளர்கள், டீக்கடைக்காரரை விலக்கிவிட்டனர். மேலும் இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நகராட்சி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் டீக்கடைக்காரரை போலீசார் கடுமையாக எச்சரித்தனர். பின்னர் அங்கிருந்து நகராட்சி பணியாளர்கள் சென்றுவிட்டனர். இருப்பினும் டீக்கடைக்காரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பணியாளர்களை தாக்கியது குறித்து நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், பஸ் நிலையத்தில் பணியாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
பழனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற நகராட்சி பணியாளர்களை டீக்கடைக்காரர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.