ஓடும் பஸ்சில் டிரைவர் மீது தாக்குதல்

திருவட்டார் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட்டம் நடத்தியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-28 19:29 GMT

திருவட்டார், 

திருவட்டார் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட்டம் நடத்தியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசு பஸ் டிரைவர்

மார்த்தாண்டத்தில் இருந்து அஞ்சுகண்டறை நோக்கி நேற்று மாலையில் ஒரு அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருவட்டாரை சேர்ந்த டிரைவர் பத்மகுமார் (வயது52) ஓட்டி ெசன்றார். அந்த பஸ் ஆற்றூர் மங்களா நடை அருகே வந்த போது எதிரே இன்னொரு அரசு பஸ் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இரண்டு பஸ்களின் நடுவே புகுந்து செல்ல முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அதன் முன்பக்கம் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தது. அப்போது அரசு பஸ் டிரைவர் பத்மகுமார் மோட்டார் சைக்கிளில் வந்தவரை கண்டித்தார். இதனால் அவர்கள் இடைேய வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சாலையோரம் கிடந்த மரக்கட்டையை எடுத்து பஸ் டிரைவரை தாக்கினார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் குவிந்தனர். உடனே அந்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

திடீர் போராட்டம்

அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் பிற அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் குலசேகரம் - மார்த்தாண்டம் சாலையில் பஸ்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சம்பவ இடம் வந்து குவிந்தனர். இதனால் மார்த்தாண்டம்-குலசேகரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் கிளை மேலாளர் அனிஷ் சம்பவ இடத்துக்கு வந்து டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிரைவரை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அத்துடன் காயம் அடைந்த டிரைவர் சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்