கொரடாச்சேரி:
கொரடாச்சேரி போலீஸ் சரகம் பெருமாளகரத்தை சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயி. இவரது சகோதரர் மூர்த்தி. இவர்களுக்குள் சொத்து சம்பந்தமாக இடப்பிரச்சினை உள்ளது. சம்பவத்தன்று கொரடாச்சேரி வெண்ணவாசல் டாஸ்மாக் கடை அருகே கதிர்வேல் மகன் குமரகுரு என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தியின் நண்பர்கள் அஸ்வின்குமார், கமலேஷ், அஜீத் ஆகியோர் சேர்ந்து குமரகுருவை முறைத்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதனை அறிந்த கதிர்வேல் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் பேசி அனுப்பிவைத்துவிட்டு அங்கு நின்று கொண்டிருந்தார். இ்ந்தநிலையில் மீண்டும் அங்கு வந்த அஸ்வின்குமார், கமலேஷ், அஜீத் ஆகிய மூவரும் சேர்ந்து கதிர்வேலை உருட்டு கட்டையால் தாக்கி அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவருகிறார்.