நண்பன் மனைவியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் மீது தாக்குதல்

நண்பனின் மனைவியுடன் குடும்பம் நடத்திய வாலிபரை அந்த பெண்ணின் கணவர் தாக்கிய நிலையில், அவரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-08 19:30 GMT

சூரமங்கலம்:-

நண்பனின் மனைவியுடன் குடும்பம் நடத்திய வாலிபரை அந்த பெண்ணின் கணவர் தாக்கிய நிலையில், அவரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

கள்ளக்காதல் மோகம் கண்ணை மறைத்த நிலையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்காதல்

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36), வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பூபதியின் நண்பரான சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் அடிக்கடி பூபதியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதில் கண்ணனுக்கும், சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

வீட்டை விட்டு ஓட்டம்

இதையடுத்து கள்ளக்காதல் மோகம் கண்ணை மறைக்க, தனது கணவரின் நண்பரான கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ சரண்யா முடிவு எடுத்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கண்ணனுடன் அவர் தனியாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோர்ட்டில் ஆஜர்

பின்னர் கண்ணன் மற்றும் சரண்யாவை மீட்டு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம்-2-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சரண்யா கணவருடன் செல்ல மறுத்து கண்ணனுடன் செல்வதாக எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் பூபதி தனது மனைவியுடன் குடும்பம் நடத்திய நண்பர் கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை மறந்து விட்டு வா, மது குடிக்கலாம் என கூறி அழைத்துள்ளார். கண்ணனும் நண்பர் தானே அழைக்கிறார் என்று நம்பி திருவாக்கவுண்டனூர் பகுதியில் நண்பர் அழைத்த இடத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.

தாக்குதல்

அப்போது பூபதி தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் கண்ணனை சரமாரியாக தாக்கி உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கண்ணன் அங்கிருந்து தலைதெறிக்க தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பூபதி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பூபதியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்