ஏ.டி.எம். கொள்ளையை தடுத்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து - தூத்துக்குடியில் பரபரப்பு
கத்திக்குத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலையில் புகுந்த மர்ம நபர், கொள்ளையடிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள அலாரம் ஒலித்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை ஏ.டி.எம். மையத்துக்கு செல்லுமாறு கூறினார்கள். இதையடுத்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் முன்னா உள்ளிட்ட 2 பேர், அந்த ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கிருந்த மர்ம நபர் தப்பி ஓட முயன்றார். அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் முன்னாவை, மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் குத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கத்திக்குத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் முன்னா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையை தடுத்த போலீஸ்காரர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.