ஓமலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி திருடும் கும்பல்-போலீசார் விசாரணை
ஓமலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி திருடும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த பெரியேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர். இவருடைய மனைவி பார்வதி். இவர் ஓமலூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் பணம் எடுத்த அனுபவம் இல்லாததால் அருகில் இருந்தவரை ரூ.2 ஆயிரம் பணம் எடுத்துக்கொடுக்க கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த நபர் ரூ.2 ஆயிரம் எடுத்து கொடுத்து விட்டு, ஏ.டி.எம். கார்டை திருப்பி கொடுத்துள்ளார். பார்வதி வீட்டுக்கு சென்று பார்த்த போது அது வேறு ஒருவரது ஏ.டி.எம். கார்டு என்பது தெரியவந்தது. மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 ஆயிரம் திருடியதும் தெரிந்தது. இது குறித்து பார்வதி, வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தார். இதே போல ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து 5 பேரிடம் பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி திருடும் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.