ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மாற்றி ரூ.20 ஆயிரம் மோசடி-வாலிபருக்கு வலைவீச்சு
கடையநல்லூரில் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மாற்றி ரூ.20 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மாற்றி ரூ.20 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கண்ணப்பர் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி செல்வி (வயது 35). இவர் தனது ஏ.டி.எம். கார்டை அண்ணன் மகன் இசக்கிதுரையிடம் (19) கொடுத்து, ஏ.டி.எம். மையத்தில் சென்று ரூ.10 ஆயிரம் பணம் எடுத்து வருமாறு அனுப்பினார்.
இதையடுத்து இசக்கிதுரை ஏ.டி.எம். கார்டை பெற்று கொண்டு, கடையநல்லூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.10 ஆயிரம் எடுத்தார். அப்போது அருகில் நின்ற வாலிபர் ஒருவர் நைசாக இசக்கிதுரையை நோட்டமிட்டு அவரது ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டார். பின்னர் அந்த நபர் தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை இசக்கிதுரையிடம் காண்பித்து, அதன் மூலம் பணம் எடுத்து தருமாறு கூறினார்.
கார்டை மாற்றி எடுத்து...
இதையடுத்து அந்த நபர் தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை கொடுக்க முயல்வது போன்று, இசக்கிதுரையின் கையில் இருந்த ஏ.டி.எம். கார்டை தட்டி விட்டார். இரு ஏ.டி.எம். கார்டுகளும் கீழே விழுந்தவுடன் அந்த நபர், இசக்கிதுரையின் ஏ.டி.எம். கார்டை மாற்றி எடுத்து கொண்டார். பின்னர் அவர் தனக்கு பணம் எடுக்க வேண்டாம் என்று கூறி விட்டு, உடனே வெளியேறிச் சென்று விட்டார்.
பின்னர் இசக்கிதுரையை செல்போனில் தொடர்பு கொண்ட செல்வி தனது ஏ.டி.எம். கார்டில் கூடுதலாக ரூ.10 ஆயிரம் எடுத்து வருமாறு கூறினார். இதையடுத்து இசக்கிதுரை மீண்டும் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது, அது வேறொரு நபருடையது என்பதையும், தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை மர்மநபர் மாற்றி எடுத்து சென்று விட்டார் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.20 ஆயிரம் மோசடி
இதுகுறித்து இசக்கிதுரை, வங்கிக்கு சென்று அதிகாரியிடம் தெரிவித்தார். அப்போது இசக்கிதுரையிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பெற்று கொண்ட அதிகாரி, அது ஈரோட்டைச் சேர்ந்த வாடிக்கையாளருடையது என்று கூறி, அவரது செல்போன் எண்ணையும் தெரிவித்தார். இதையடுத்து அந்த செல்போன் எண்ணில் இசக்கிதுரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த வாடிக்கையாளரும் தனது ஏ.டி.எம். கார்டை மர்மநபர் நைசாக மாற்றி எடுத்து சென்று, தனது பணத்தை அபேஸ் செய்ததாக தெரிவித்தார்.
இதற்கிடையே இசக்கிதுரையிடம் இருந்து நைசாக பறித்து சென்ற ஏ.டி.எம். கார்டு மூலம் மர்மநபர் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இரு முறை தலா ரூ.10 ஆயிரம் வீதம் எடுத்துள்ளார். இதனை அறிந்த வங்கி அதிகாரி, அந்த ஏ.டி.எம். கார்டை முடக்கினார்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து செல்வி அளித்த புகாரின்பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இசக்கிதுரையிடம் ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்த நபரே ஈரோட்டிலும் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, மோசடி செய்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.