ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை திருடிய வாலிபர் கைது
உதவிகேட்ட முதியவரின் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கவனத்தை திசை திருப்பி...
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி(வயது 65). இவர் வி.கைகாட்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது பண தேவைக்காக வி.கைகாட்டி பகுதியில் உள்ள ஒருதேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சென்ற மயில்சாமிக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்கத்தெரியவில்லை. இதையடுத்து ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபைர கூப்பிட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுத்து கொடுத்து உதவுமாறு மயில்சாமி கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர், மயில்சாமிக்கு உதவுவது போல் அவரது கவனத்தை திசைதிருப்பி ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பதுபோல் நடித்து பின்னர் எந்திரத்தில் பணம் இல்லை எனக்கூறி தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த ஒரு ஏ.டி.எம். கார்டை மயில்சாமியிடம் கொடுத்து அவரை அனுப்பி விட்டார். வீட்டிற்கு சென்ற மயில்சாமி தனது மகளிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை கொடுத்துள்ளார்.
கைது
அதனைப் பார்த்த மயில்சாமியின் மகள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்து 400 எடுத்துள்ளதாக வந்த செல்போன் குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஏ.டி.எம். கார்டு மாற்றப்பட்டு இருப்பது மயில்சாமிக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் உடனே விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மயில்சாமியை ஏமாற்றி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தது ரெட்டிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த அபிமன்யு(22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.