குடியாத்தம்
குடியாத்தத்தில் ஏ.டி.எம்.மையத்தின் கதவுகளை கல்லால் உடைத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏ.டி.எம்.மையம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஒரே நாளில் பல ஏ.டி.எம்.எந்திரங்கள் உடைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு கொள்ளையில் ஈடுபட்டு தப்பிய வட மாநில கொள்ளையர்களை அவர்களது இடங்களுக்கே சென்று கைது செய்து பல லட்சம் ரூபாயை மீட்டனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள ஏ.டி.எம் மையங்கள் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
கடந்த மாதம் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற நபரை ரோந்து பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர்.
கல்லால் தாக்கி உடைப்பு
இந்த நிலையில் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் கற்களைக் கொண்டு ஏ.டி.எம். கண்ணாடிகளை உடைத்து கொண்டு இருப்பதாக அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் ரோந்து பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது கற்களால் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி கதவுகளை உடைத்த நபரை அவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விடுவிப்பு
விசாரித்தபோது கற்களால் ஏ.டி.எம். கண்ணாடி கதவை உடைத்தவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணைக்கு பின் அந்த நபரை விடுவித்தனர்.குடியாத்தம் பகுதியில் ஏ.டி.எம். எந்திரம் கல்லால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.