ஏ.டி.எம். கொள்ளையில் மேலும் 2 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள் பணத்தை கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு சென்று பதுக்கி உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறினார்.

Update: 2023-02-21 16:47 GMT


திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள் பணத்தை கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு சென்று பதுக்கி உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறினார்.

4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்த 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையர்கள் கடந்த 12-ந் தேதி ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானாவிற்கு சென்று 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கன்டெய்னர் லாரி

இந்த நிலையில்  அரியானாவில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலைக்கு திரும்பினர்.

அதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-

ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்களில் 2 பேர் அரியானாவில் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் சுவாரசியமான அனுபவமாக அமைந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரை பிடிக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் ராஜஸ்தானில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இதற்கான பணி தொய்வு அடைந்துள்ளது.

இன்னும் 5 அல்லது 7 நாட்களில் மீண்டும் அவர்களை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டப்படும். கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தை கன்டெய்னர் லாரி மூலம் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து இடமாற்றம் செய்துள்ளனர்.

பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு கேமரா

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு சேதம் அடைந்ததாகவே போலீசாருக்கு தகவல் வந்தது. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னர் தான் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரம் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

அதன் பின்பு தான் மாவட்டம் முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பார்வையிட்ட பின்னர் தான் மேலும் 3 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவம் நடந்தது தெரிந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளையடித்து விட்டு சுங்கச்சாவடி இல்லாத பகுதி வழியாக கோலார் பகுதிக்கு சென்று உள்ளனர்.

கொள்ளையர்கள் சென்ற வழியில் உள்ள டீக்கடை, ஓட்டல் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் கோலார் சென்றது கண்டறியப்பட்டது. அவர்களை கண்டறிய சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

ஒரு நிமிடத்திற்கு முன்பு தான்...

மேலும் கொள்ளை நடைபெற்ற போது உடனடியாக ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமராக்களின் பதிவுகள் கிடைத்து இருந்தாலோ, அலாரம் அடித்து இருந்தாலோ கொள்ளையர்களை திருவண்ணாமலையிலேயே பிடித்திருக்கலாம்.

ஆனால் யாருடைய ஆதரவும் இல்லாமல் போலீசாரின் முழு முயற்சியால் பொது இடங்களில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மட்டுமே வைத்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொள்ளையர்கள் காரில் திருவண்ணாமலையில் கொள்ளையடித்த பணத்துடன் சித்தூர் வழியாக கோலார் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் சித்தூரில் இருந்து 4 மாநிலங்களுக்கு பிரியும் சாலையில் சிறிது குழப்பம் ஏற்பட்டதால் அவர்கள் கோலார் சென்று விட்டனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்து விடுவோம்.

கடந்த 12-ந் தேதி அதிகாலை கலசபாக்கத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க சென்றதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்புதான் அந்த பகுதி ரோந்து போலீஸ் அதிகாரி ஏ.டி.எம். மையத்தை கண்காணித்து விட்டு சென்றுள்ளார்.

கொள்ளையர்கள் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போன்று காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளதால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.

தொடர்ந்து விசாரணை

கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பாக வட மாநில லாரிகள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து பாதைகளை நன்கு கண்காணித்துள்ளனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரித்ததில் அவர்கள் எந்த வழியில் வந்தால் எந்த இடத்திற்கு செல்லலாம் என்பதை தெளிவாக தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் எப்படி ஒரே நாளில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தனர் என்றும், அதற்கான பின்னணி குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் 2 பேர் கைது

இதற்கிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கோலார் பகுதியில் தங்கி இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டு மீண்டும் கோலார் பகுதிக்கு சென்றதாக போலீசாருக்கு அறிவியல் ரீதியான தடயங்கள் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் கோலார் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கர்நாடக மாநிலம் கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குஷரத்பாஷா (வயது 43) என்பவரையும், அசாம் மாநிலம் லைலா பைபாஸ் ரோடு லால்பூர் பகுதியை சேர்ந்த அப்சர் உசேன் (23) என்பவரையும் கோலார் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குஷரத் பாஷா கொள்ளையர்களுக்கு பண பரிமாற்றம் செய்ய உதவியதும், அப்சர் உசேன் கொள்ளையர்களுக்கு கோலாரில் ஒரு விடுதியில் தங்க அறை எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோலாரில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று மாலை அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-ல் மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்