கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டியை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி, ஒலிம்பிக் தீபம் ஏந்தி போட்டியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தனித்திறமை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து, உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து உடற்கல்வி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உடல்நிலை மற்றும் மனநிலையை சரியாக வைத்திருந்தால் மட்டுமே கல்வியில் முழு கவனம் செலுத்தி சரிவர கல்வி பயில முடியும். எனவே உடல்நிலையை பேணிகாப்பதில் யோகா மற்றும் உடற் பயிற்சிகள் சிறந்த பங்களிக்கிறது. எனவே மாணவ, மாணவியர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் தனித்திறமையை வளர்த்துக்கொண்டு உள்ளத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
598 பேர் பங்கேற்பு
இதில், ஏற்கனவே குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் என்று மொத்தம் 598 பேர் பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 15 முதல் 17 வயதுக்குவரையிலானவர்கள், 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று 3 பிரிவுகளாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் 100 மீட்டர், 200 மீட்டர், 600 மீட்டர், ஆயிரம் மீட்டர், ஆயிரத்து 500 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மாநில அளவிலான போட்டி
இந்த போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடிக்கும் மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் (மேல்நிலை) ஆரோக்கியசாமி, (தொடக்கக்கல்வி) ராஜீ, (தனியார் பள்ளிகள்) துரைராஜ், ஏ.கே.டி.பள்ளி தாளாளர் மகேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.