கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி-அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-17 16:05 GMT

கிருஷ்ணகிரி:

தடகள போட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. தடகள சங்க மாநில தலைவர் தேவாரம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மதியழகன் எம்.எல்.ஏ. வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தேசிய கொடி ஏற்றினார்.

இதில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு, விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கூறியதாவது:-

ரூ.25 கோடி நிதி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு ஒரு சிந்தட்டிக் டிராக், உயர்மின் கோபுர விளக்கு, ஜூடோ அரங்கம், நடைபாதை மின்விளக்கு ஆகியவற்றை கேட்டுள்ளனர். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கு முதல்கட்டமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் தமிழக முதல்-அமைச்சர் நடத்தி முடித்துள்ளார். அடுத்த மாதம் (செப்டம்பர்) உலக மகளிர் டென்னிஸ் போட்டியானது சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்து சர்வதேச தரத்திலான போட்டிகளை, சூழ்நிலைக்கு ஏற்ப நடத்துவற்கு தமிழக முதல்-அமைச்சர் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

25 பேர் குழு

பெங்களூருவில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படும் கழிவுகளால் கெலவரப்பள்ளி அணையில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் கிரானைட் குவாரிகளை கண்டறிய 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, நேரடியாக ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.எம்.ஏ. செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. வெற்றி செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், உதவி கலெக்டர் சதீஷ்குமார், மாநில தடகள சங்க பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட தடகள சங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கிருஷ்ணன், விளையாட்டு துறை இணை இயக்குனர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், உடற்கல்வி இயக்குனர் வளர்மதி, மாநில தடகள சங்க மேலாளர் வினோத்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்