விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைபெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைபெற வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-20 18:45 GMT

நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைபெற வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதற்கு பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். சர்வதேச போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள்), தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள் மட்டும்), மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள்) மட்டும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெறுவதற்கான இதர முழு தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் சென்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்