தூத்துக்குடி மாவட்ட அளவில்பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி
தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக தலைவர் சேசையா வில்லவராயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கால்பந்து போட்டி
தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான செவாலியர் சி.ஐ.ஆர்.மச்சாது நூற்றாண்டு சுழற் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 14 பள்ளிக்கூடங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி, ஸ்பிக் மேல்நிலைப்பள்ளி, பி.எம்.சி. மேல்நிலைப்பள்ளி, வி.வி.டி மேல்நிலைப்பள்ளி, விகாசா மேல்நிலைப்பள்ளி, ஏ.பி.சி. மேல்நிலைப்பள்ளி, புனித லசால் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் மர்காசியஸ் மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநேரி பேர்ல் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இன்று தொடக்கம்
போட்டிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி கால்பந்து கழக தலைவர் சேசையா வில்லவராயர், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக செயலாளர் லூர்து பிரிஸ், செவாலியர் சி.ஐ.ஆர்.மச்சாதுவின் மகன்கள் ஆர்.அன்டோ மச்சாது, ஆர்.ஹாட்லி மச்சாது ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர். போட்டிகள் தினமும், காலை, மாலை ஆகிய இருவேளைகளில் நடக்கிறது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.