தேனி தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில்ரூ.2 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் சிக்கினார்:போலி சாவி பயன்படுத்தி கைவரிசை

தேனியில் தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் போலி சாவி பயன்படுத்தி ரூ.2 லட்சம் திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-14 18:45 GMT

ரூ.2 லட்சம் திருட்டு

தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. ரத்தினம் நகரை சேர்ந்த தினேஷ் (வயது 33) அங்கு மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ந்தேதி இரவு அவர் அலுவலகத்தில் உள்ள பீரோவில் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 158 வைத்துவிட்டு அலுவலகத்தை பூட்டிச் சென்றார். நேற்று முன்தினம் காலையில் அலுவலகத்துக்கு வந்து பீரோவை திறந்து பார்த்த போது அதற்குள் இருந்த பணம் மாயமாகி இருந்தது.

பீரோ பூட்டி இருந்த நிலையில் பணம் மாயமாகி இருந்ததால் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது, கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு அதே அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றிய ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரம் காந்திநகர் 1-வது தெருவை சேர்ந்த முகமது சல்மான் (25) என்பவர், போலி சாவியை பயன்படுத்தி அலுவலகம் மற்றும் பீரோவை திறந்து பணம் திருடியது பதிவாகி இருந்தது. இதுகுறித்து மேலாளர் தினேஷ் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பணம் மீட்பு

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருடிய முகமது சல்மானை பிடிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், கர்ணன், ஏட்டுகள் கணேசன், விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நேற்று முகமது சல்மானை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 158-ஐ முழுமையாக கைப்பற்றினர்.

அந்த பணத்துடன் அவர் வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்ல இருந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடனை கைது செய்ததோடு, திருடு போன பணத்தை முழுமையாக மீட்ட தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்