நண்பர்களுடன் சேர்ந்து நகைக்கடையில் 4½ கிலோ தங்கம் திருடியவர் கைது

நண்பர்களுடன் சேர்ந்து நகைக்கடையில் 4½ கிலோ தங்கம் திருடியவர் கைது

Update: 2023-01-04 18:45 GMT

சாயல்குடி,

நகைக்கடையில் நண்பர்களுடன் சேர்ந்து 4½ கிலோ நகையை திருடியவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்.

வீட்டில் திருட்டு

கடலாடி வாணிய செட்டியார் பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவர் தங்க நகை தொழில் செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 12-ந் தேதி பழனி, அவரது மனைவி பேச்சியம்மாள் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக வெளியூர் சென்றிருந்தனர். மீண்டும் கடலாடிக்கு நவம்பர் 25-ந் தேதி வந்துள்ளனர். வீட்டில் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது.

பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து கடலாடி போலீஸ் நிலையத்தில் பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த வாரத்தில் அதே பகுதியில் வீடுகளில் கதவுகளை தட்டி விட்டு ஆட்கள் வீட்டில் இருப்பதை அறிந்ததும் மர்ம நபர் தப்பிச்சென்றார்.

சிக்கினார்

கடலாடியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாடி வருவதாகவும் இப்பகுதியில் திருட்டு அதிகரித்து வருவதாகவும் வந்த தகவலின் பேரில் கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கடலாடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கமுதி நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேவுகராஜ் (60) என்பது தெரியவந்தது.

அவனை பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில் கடலாடியில் நடந்த 6 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை வைத்து சோதனை செய்ததில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட திருட்டு வழக்குகளில் இவரது கைரேகை ஒத்துப்போனது.

விசாரணை

மேலும் விசாரணையில் கடந்த 2011-ம் ஆண்டு சாயல்குடியில் உள்ள ஒரு நகை கடையில் தானும் வெளி மாவட்டத்தை சேர்ந்த கூட்டாளிகள் 3 ேபர் உள்பட 4 பேரும் சேர்ந்து 4½ கிலோ நகையை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். சேவுகராஜன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை பிடிக்க தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

மேலும் சேவுக ராஜனை போலீசார் கைது செய்தனர். கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு நகை திருடியவரை கைது செய்த கடலாடி போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்