ஈரோட்டில்சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் நேற்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் பாஸ்கர்பாபு போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் உஷாராணி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கோரிக்கைகள்
இந்த போராட்டத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62 வயதாக உயர்த்த வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா உள்பட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.