ஈரோடு தனியார் கருத்தரித்தல் ஆஸ்பத்திரியில்அனுமதியின்றி செயல்பட்ட ஸ்கேன் மையத்துக்கு சீல் வைப்பு
ஈரோடு தனியார் கருத்தரித்தல் ஆஸ்பத்திரியில் அனுமதியின்றி செயல்பட்ட ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு சத்திரோட்டில் உள்ள ஒரு ஐஸ்வர்யா கருத்தரித்தல் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் மையம் உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி தலைமையில் மருத்துவக்குழு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும், புகார் தெரிவிக்கப்பட்ட ஸ்கேன் மையத்தில் என்னென்ன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது? அந்த ஸ்கேன் மையத்துக்கு உரிமம் பெறப்பட்டு உள்ளதா? மருத்துவ உபகரணங்களை யார் பயன்படுத்துகிறார்கள்? தினமும் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது? உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினார்கள்.
ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர். அப்போது ஸ்கேன் மையத்துக்கு உரிய உரிமம் பெறப்படவில்லை என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், அனுமதியில்லாமல் ஸ்கேன் மையத்தை இயக்கியது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு நோட்டீசு வழங்கினர்.