ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கல அலங்கார பொருட்கள் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கல அலங்கார பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கல அலங்கார பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகழாய்வு பணிகள்
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும், அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்களை அங்கேயே காட்சிப்படுத்தும் வகையில் 'சைட் மியூசியம்' அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆதிச்சல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றிப்பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதுடன், சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டன.
அலங்கார பொருட்கள்
இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் நடைபெற்ற அகழாய்வில், ஏற்கனவே தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்ட குழியிலேயே தற்போது வெண்கலத்தாலான அலங்கார பொருட்களும் கண்டறியப்பட்டு உள்ளன.
வெண்கலத்தால் செய்யப்பட்ட அலங்கார ஜாடியின் மீது மான், ஆடு, நாய், நீர்க்கோழி, தூண்டில் முள் போன்றவை இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. அலங்கார ஜாடியின் ஒரு பகுதி சேதமடைந்தும், அதன் மீது மான் இருப்பது போன்றும், மற்ற உருவங்கள் அருகிலும் கிடந்தன. மேலும் அங்கு இரும்பாலான வாள், கத்தி போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மரத்தாலான கைப்பிடிகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ''ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த மாதத்துடன் (செப்டம்பர்) அகழாய்வு பணிகள் நிறைவு பெறும் நிலையில், விரைவில் அருங்காட்சியம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறும்'' என்று தெரிவித்தனர்.
----