பூம்புகார் அரசு கல்லூரியில் உதவி கலெக்டர் ஆய்வு
மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக பூம்புகார் அரசு கல்லூரியில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவெண்காடு:
மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக பூம்புகார் அரசு கல்லூரியில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.
மாணவர்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கடந்த 2 நாட்களாக கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தியும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.
இதன் எதிரொலியாக நேற்று சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா கல்லூரிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கல்லூரியில் உள்ள வகுப்பறை, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அடிப்படை வசதிகள்
அப்போது மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரியில் செய்து தரவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் உறுதி அளித்தார். ஆய்வின் போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.