வளர்ச்சி திட்ட பணிகளை சட்டசபை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை சட்டசபை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-07-14 18:45 GMT


நாகை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை சட்டசபை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு

நாகை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சட்டசபை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். குழு தலைவரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் தலைமையில் 8 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய இந்த சட்டசபை உறுதிமொழி குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது வேளாங்கண்ணி அருகே செருதூர் வெள்ளையாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் பாலம் அமைக்கும் பணியினை சட்டசபை உறுதிமொழி குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து வெள்ளப்பள்ளம் கடற்கரையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தனர்.

உப்பு தண்ணீரில் குளிக்கிறோம்...

தொடர்ந்து நாகையில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு குழு தலைவர் வேல்முருகன், மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் மாணவர்கள் கூறும்போது:-

விடுதியில் உப்பு தண்ணீரில் குளிக்கிறோம், கொசுக்கடியில் வாழ்கிறோம், பக்கெட், குவளை இன்றி சரியாக குளிக்க முடியாமல் தவிக்கிறோம். மின்விசிறி சரியாக ஓடவில்லை என தங்களது குறைகளை கவலையுடன் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன், மாணவர்கள் தங்கி இருந்த அறை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கழிவறை உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, விடுதி மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து முடித்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அகஸ்தீஸ்வரர் கோவில் இடத்தில் மண்டபம் கட்டும் பணி, நம்பியார் நகர் பேரிடர் மீட்பு மையம் ஆகியவற்றில் சட்டசபை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், உறுதிமொழி குழு செயலாளர் சீனிவாசன், தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்