ஒருவர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
கார்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலம்:
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மேட்டுமருதூர் குடியானத்தெருவைச் சேர்ந்தவர் சிவராமன் (வயது37).இவர் தனது காரில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் சிவராமனின் காரின் மீது மோதியது. இது தொடர்பாக சிவராமன் கேட்ட போது மற்றொரு காரில் வந்த நீடாமங்கலம் திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தருண் (34), எருமைக்காரன் சந்து பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (20), பூவனூர் சம்பாவளி குடியானத்தெருவைச் சேர்ந்த செல்வம் (24), ஒரத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த கார்த்தி ஆகியோர் சிவராமனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிவராமன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தருண், ஹரிஹரன், செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.