சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு தீக்குளிக்க போவதாக மிரட்டல்

அணைக்கட்டு அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு கிராமமக்கள் தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர்.

Update: 2023-05-18 16:40 GMT

ஒருகிலோ மீட்டர் தூரம் சுற்றி

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சியில் மலைச்சந்து கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான சுடுகாடு கெங்கநல்லூர் கிராம பகுதியில் உள்ளது. மலைச்சந்து கிராமத்தில் யாராவது இறந்தால் உடலை எடுத்து செல்ல தார் சாலை வழியாக ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.

ஆகவே ஊருக்கு அருகாமையில் உள்ள அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தின் வழியாக உடலை எடுத்துச் செல்வதற்கு பாதை ஏற்படுத்தி விளை நிலத்தின் வழியாக உடலை கொண்டு சென்றனர். இதற்கு நிலத்தின் உரிமையாளர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

தனியார் நிலம்

இந்த நிலையில் நேற்று மலைச்சந்து பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது உடலை எடுத்து செல்வதற்கு தனியார் பட்டா நிலத்தில் முறம்பு கொட்டி சாலை அமைத்து தர வேண்டும் எனவும், தவறினால் மறியலில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்றையினர் அந்தப் பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அப்பகுதி மக்கள் பட்டா நிலத்திலேயே எங்களுக்கு முறம்பு கொட்டி சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு வருவாய்த்துறையினர், அது தனி நபருக்கு சொந்தமான இடம். அதில் சாலை வசதி ஏற்படுத்தித்தர முடியாது என்று கூறினர்.

தீக்குளிக்க போவதாக மிரட்டல்

இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை அமைத்து தராவிட்டால் நாங்கள் தீக்குளிப்போம் என மிரட்டினர். தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீசார் மற்றும் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை மனுவாக எழுதி தாருங்கள். தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இறந்தவரின் உடலை தனியார் நிலத்தின் வழியாகவே கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்