பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம்

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக ஆசிரியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2023-10-03 00:20 GMT

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் 3 வகை பிரிவிலான ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் நேற்று வரை சுமார் 217 பேர் உடல்நலம் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்த நிலையில், காலாண்டு தேர்வு முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடங்கள் திறக்க உள்ளன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வருகிற 9-ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கிறது. எனினும், அந்த மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று முதல் அடுத்த பருவத்திற்கு மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்த வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்படும் எண்ணும், எழுத்தும் பயிற்சி தொடங்குகிறது.

அமைச்சர் பேச்சுவார்த்தை தோல்வி

இந்த சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு செல்ல அறிவுறித்திட வேண்டும் என்பதில் அரசு தரப்பில் தீவிரம் காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பிற்பகலில் 3 பிரிவு ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் மிகவும் கனிவாக பேசி அவர்களின் கோரிக்கையை நிதித்துறையினரிடம் கலந்து பேசி எந்த அளவிற்கு சாதகமான முடிவு எடுக்க முடியுமோ அதை முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி நல்ல முடிவை அறிவிக்கிறோம். இப்போதைக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு முதல்-அமைச்சரிடம் இருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று தெரிவித்ததால் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம்

அதைத்தொடர்ந்து நேற்று மாலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 3 பிரிவுகளை சேர்ந்த ஆசிரியர்களும் இன்று முதல் விடுப்பு எடுத்து போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்து உள்ளனர். இதனால், போராட்டமானது நேற்று இரவும் தொடர்ந்தது. காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நிலையில் ஆசிரியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அது மிகை அல்ல.

Tags:    

மேலும் செய்திகள்