பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
காந்தல் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
காந்தல் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து கழக பணிமனை
கோவை கோட்டத்திற்கு உட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், மேட்டுப்பாளையம்-1 ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்குள் என 270 வழித்தடங்களில் 335 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் அரசு பஸ்சை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.38 லட்சம் வருமானம் வருகிறது.
இதற்கிடையே மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதால், சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக 30-க்கும் மேற்பட்ட சர்க்யூட் எனப்படும் சுற்று பேருந்துகள் இயக்கப்பட்டது.
பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு
இதனால் நீலகிரி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தெரிகிறது.
ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து காந்தல் பகுதிக்கு 6 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று காலை காந்தல் பெனட் பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் பேரில் ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீசார் போக்குவரத்து கழக கிளை மேலாளர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், காந்தல் பகுதியில் சுமார் 20,000 பொதுமக்கள் வசித்து வருகிறோம். இங்கிருந்து பெரும்பாலானவர்கள் ஊட்டி டவுனில் பணியாற்றுகின்றனர். இங்கிருந்து 6 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 2 பஸ்களாக குறைக்கப்பட்டது. ஆனால் இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசினால் 4 பஸ்கள் இயக்கப்படுவதாக கூறுகின்றனர். எனவே இந்த பஸ் சிறைபிடித்து மீதம் 3 பஸ் வந்தவுடன் இந்த பஸ்சை விடுகிறோம் என்று கூறினோம். இதனால் தலைக்குந்தா பகுதிக்கு இயக்கப்பட்ட வேறு ஒரு பஸ்சை இங்கு திருப்பி விட்டுள்ளனர். அடுத்த ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கிவிடும். எனவே இதற்கு முன்பு இயக்கப்பட்டது போல காந்தல் பகுதிக்கு ஆறு பஸ்கள் இயக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.