"அரசியல் சாசன காவலனாக கவர்னரை பார்க்க வேண்டும்"
அரசியல் சாசன காவலனாக கவர்னரை பார்க்க வேண்டும் என்று பழனியில், ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சாமி தரிசனம்
ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் நேற்று மாலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு பழனி கோவில் தண்டபாணி நிலையத்தில் போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், இணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.
பின்னர் அவர் தனது குடும்பத்துடன் ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு ஆனந்தவிநாயகர் சன்னதியில் வழிபட்டார். அதையடுத்து சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு தங்கரதம் இழுத்து வழிபட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் சாசன காவலன்
இறைவன் ஒருவனே. அவரை, அவரவர் விருப்பப்படி சிவனாக, முருகனாக, இயேசுவாக, அல்லாவாக வழிபட முழுமையான உரிமை உள்ளது. அதுதான் உண்மையான மதச்சார்பற்ற தன்மை. இந்த கடவுள் பெரிது, அந்த கடவுள் பெரிது என சொல்லுகிறவர்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்காதவர்கள். பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்களாக கருதப்படுவார்கள்.
சமுதாயத்துக்கு எது நல்லதோ அதை அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். எது எதிராக இருக்கிறதோ, அதை அனைவரும் எதிர்க்க வேண்டும். தமிழக அரசு, மாநில கவர்னரை அரசியல் சாசன காவலனாக பார்க்க வேண்டும். அதேநேரத்தில் தன்னுடைய அணுகுமுறையை தமிழக அரசு மாற்றுகிறபோது, தானாக கவர்னரின் அணுகுமுறையும் முழுமையாக தமிழகத்தின் நலனில் திரும்பும். தமிழக நலனில் அசைக்க முடியாத ஆர்வமுடையவர் கவர்னர் ரவி என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.