பு.ஆதிவராகநல்லூர் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை கலெக்டரிடம், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. மனு
பு.ஆதிவராகநல்லூர் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. மனு கொடுத்துள்ளார்.;
புவனகிரி,
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தனது தொகுதியில் உள்ள குறைகளை தீர்க்கக்கோரி கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- புவனகிரி தொகுதிக்குட்பட்ட பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் வெள்ளாறு உள்ளது. இந்த ஆற்றில் கடல்நீர் உட்புகுந்து வருவதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுறது. மேலும் குடிநீரும் உப்பாக மாறி வருகிறது. இதை தடுக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணியும் நடந்தது. ஆனால் இதுநாள்வரை தடுப்பணை அமைக்கும் பணி நடைபெறவில்லை. ஆகவே தடுப்பணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் புவனகிரி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு முதல் சுரங்கம் முதல் 3-ம் சுரங்கம் அமைக்க தங்களுடைய வீடு, நிலத்தை கொடுத்துள்ளதால், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. எனவே வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி.யில் வேலை வாய்ப்பு மற்றும் இழப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும். புவனகிரியில் தீயணைப்பு நிலையம், கங்கைகொண்டான் பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.