சாலையில் தேங்கிய சாக்கடை நீர்; போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-05-30 17:05 GMT


திருப்பூர் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சாலையில் தேங்கிய கழிவுநீர்

திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் மாநகராட்சி 53-வது வார்டுக்குட்பட்ட நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடை பகுதி உள்ளது. இங்கு நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாக்கடை கழிவுநீர் முறையாக செல்ல வழி இல்லாததால் மழைநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் கழிவுநீர்சாலையில் சென்றதால் அதிகளவு துர்நாற்றம் வீசியது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி சென்றார்கள். அந்த பகுதியில் உள்ள வீடுகளிலும் சாக்கடை கழிவுநீர் புகுந்தது.

மறியல் செய்ய முடிவு

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், கடைக்காரர்கள் கூறுகையில், மழைக்காலங்களில் இதுபோன்ற நிலைமை அடிக்கடி ஏற்படுகிறது. இது தொடர்பாக பலமுறை வார்டு உறுப்பினர் கலெக்டர் மற்றும் மேயர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழை காலங்களில் அடிக்கடி இதே நிலைதான் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து மேயர் மற்றும் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை மறியல் செய்ய முடிவு செய்ய உள்ளோம் என்றனர். 

மேலும் செய்திகள்