கோட்டூர், நீடாமங்கலத்தில் மாணவ-மாணவிகளுக்கான கலை திருவிழா நடைபெற்றது.
கோட்டூர்
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலை திருவிழா எனும் பெயரில் பல்வேறு போட்டிகள் கடந்த 30-ந் தேதி 3 நாட்கள் நடந்தன. இசைக்கருவிகள் வாசித்தல், நடனம், நுண்கலைகள் என 196 வகைகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. கோட்டூரில் நடந்த கலை திருவிழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் வித்யா, மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை தொடங்கி வைத்து பேசுகையில், கோட்டூர் ஒன்றிய மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் வென்று வெளிநாடு சென்று கோட்டூர் ஒன்றியத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். தொடர்ந்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தங்கபாபு பேசுகையில், இந்த கலை திருவிழாவை தமிழக அரசு ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்றார். இந்த போட்டிகளில் வட்டார அளவில் முதல் 2 இடங்கள் பெறுபவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலும், மாநில அளவில் முதலிடம் பெறுபவர்களை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, விமானம் மூலம் வெளிநாடு அழைத்து சென்று கவுரவிக்க உள்ளது. மாநில அளவிலான இறுதிப்போட்டி வருகிற ஜனவரி 2023 முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் ஜெயஜான்சன் சாந்தகுமார், பிரபாவதி, தாளாளர் அன்புச்செல்வம் மற்றும் பலர் செய்து இருந்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. 170 போட்டிகளில் 340 மாணவர்கள் முதல் 2 இடங்களில் தேர்வு பெற்று மாவட்ட அளவில் நடக்கும் கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நிறைவுநாள் விழாவில் வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கி பேசினார். வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுரேன், கலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் அன்புராணி மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக தென்காரவயல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ் வரவேற்றார். முடிவில் முன்னாவல் கோட்டை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பழனிச்செல்வி நன்றி கூறினார்.