பேட்டை:
தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விசார் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழா பள்ளி அளவில் பல்வேறு கலை நிகழ்ச்சி போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் 20 மாணவர்கள் தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
அதன்படி நெல்லை நகர்வள மையத்திற்கு உட்பட்ட பேட்டை ரகுமான்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமையில் கலைத்திருவிழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை கமலா வரவேற்றார். மாணவர்களுக்கு ஓவியம் வரைதல், அழகு கையெழுத்து, மற்றும் நாட்டுப்புற பாடல் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நடுவர்களாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் நவுசின் ரசிதா, கவுன்சிலர் அல்லா பிச்சை, மேலாண்மை குழு உறுப்பினர் செய்யதலி பாத்திமா ஆகியோர் செயல்பட்டனர். முடிவில், ஆசிரியர் பயிற்றுனர் கார்த்திகை நன்றி கூறினார்.