தூத்துக்குடிக்கு ரெயில்மூலம் 1100 மெட்ரிக் டன் யூரியா உரம் வருகை
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெயில் மூலம் 1100 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்து உள்ளது. மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெயில் மூலம் 1100 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்து உள்ளது. மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
1100 மெட்ரிக்டன் யூரியா
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர்; மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களில் மானாவாரி பயிர்களுக்கான விதைப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஏற்கனவே செப்டம்பர் மாத இறுதியில் பெய்த மழையை கொண்டு விதைக்கப்பட்ட மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் தற்சமயம் மேலுரம் இடும் பருவத்தில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால், கிரிப்கோ மற்றும் மதராஸ் பெர்டிலைசர் ஆகிய நிறுவனங்களில் இருந்து 1100 மெட்ரிக் டன் யூரியா தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த உரத்தில் 760 மெட்ரிக் டன் யூரியா மானாவாரி பகுதியில் உள்ள 58 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், 340 மெட்ரிக் டன் யூரியா தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது.
விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையை தங்களுடன் எடுத்து சென்று விற்பனை முனையக்கருவியில் பில் போட்டு யூரியா மூடை ஒன்றிற்கு அரசு நிர்ணயித்து உள்ள ரூ.266.50 என்ற விலையில் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாய பெருமக்கள் தங்கள் பயிருக்கு மேலுரம் இடும்போது நேரடியாக யூரியாவை மண்ணில் இடுவதை குறைத்து நானோ யூரியாவை ஏக்கர் ஒன்றிற்கு 500 மில்லி வீதம் இலை வழியாக தெளித்து மண், நீர் மற்றும் சுற்று சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
நடவடிக்கை
உரவிற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கே உரங்களை விற்பனை முனையக்கருவியில் பில் போட்டு விவசாயிகளுக்கு விற்க வேண்டும். கடைகளில் உள்ள உர இருப்பு விவரங்களை தகவல் பலகையில் தினந்தோறும் முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் உரங்களுடன் இணை பொருட்களாக வாளி உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், இயற்கை உரங்கள் மற்றும் டானிக் போன்றவற்றை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. விதிமுறைகளை மீறும் கடைகள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்படி உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.