பொய் வழக்கில் கைது செய்து கடுமையாக தாக்கினார்களா?-போலீஸ் அதிகாரிகள் மீதான புகாரை சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பொய் வழக்கில் கைது செய்து கடுமையாக தாக்கினார்களா?-போலீஸ் அதிகாரிகள் மீதான புகாரை சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-09 20:17 GMT


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் போலி டாக்டரான ஒரு பெண்ணுக்கு நான் உதவியதாக கடந்த 2020-ல் தொண்டி போலீசார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை கடுமையாக தாக்கி கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதைய திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் என்னை பழி வாங்கும் வகையில் அவரது தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். எனவே, துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கோரி திருவாடானை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எனது புகாரை விசாரித்து, முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தொண்டி போலீசார் முறையாக செயல்படுத்தவில்லை. எனவே திருவாடானை கோர்ட்டு உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி சத்திசுகுமார் குர்ப் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், மனுதாரர் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கீழ் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசார் முறையாக பின்பற்றவில்லை. மனித உரிமை மீறலில் ஈடுபடும் போலீசார் சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து மாவட்ட நீதிபதியே விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும், மனித உரிமை விதிகளும் தெரிவிக்கின்றன. அத்துடன் மனுதாரரை கைது செய்து சிறையில் அடைக்கும் போது பதிவு செய்யப்பட்டுள்ள சிறை குறிப்பை பார்க்கும்போது போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட்டால் பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் மனுதாரரின் புகாரில் உண்மை தன்மை இல்லை என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர். எனவே, மனுதாரரின் புகார் குறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மனுதாரர் மீண்டும் இந்த கோர்ட்டை நாடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்