தட்கல் டிக்கெட் எடுக்க சட்டவிரோதமான மென்பொருளை தயாரித்து விற்றவர் கைது
ரெயில்வே தட்கல் டிக்கெட் எடுக்க சட்ட விரோதமான மென்பொருளை தயாரித்து விற்றவரை தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்தனர்.
சட்டவிரோத மென்பொருள்
வேலூரில் தனியார் ரெயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் சில கடைகளில் இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழக மென்பொருளுக்குள் சென்று விரைவாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதாக ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி ரெயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.
இந்த வழக்கில் சட்ட விரோதமான மென்பொருளை விற்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த சைலேஸ்யாதவ் என்பவரை கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சைலேஸ்யாதவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் தட்கல் டிக்கெட் எடுப்பதற்கான போலி மென்பொருளை உருவாக்கி ஏஜெண்டுகள் மூலம் கடைகளுக்கு விற்றது மும்பை கோண்டா பகுதியை சேர்ந்த ஷம்ஷேர் ஆலம் (வயது 40) என்பது தெரியவந்தது.
மும்பையில் கைது
இதையடுத்து தனிப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆதித்யா, அரிகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் மும்பைக்கு சென்று ஷம்ஷேர் ஆலமை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன், 4 சிம் கார்டு, ஒரு லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் அருண்குமார் கூறுகையில், ''ரெயில்வே தட்கல் டிக்கெட் எடுக்க ரெயில்வே துறையின் மென்பொருளுடன் ஊடுருவும் வகையில் 4 வகையான சட்டவிரோதமான மென்பொருளை அவர் தயாரித்து உள்ளார். இந்த மென்பொருளை ஏஜெண்டுகள் மூலம் தனியார் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் விற்பனை செய்கின்றார். இந்த மென்பொருள் ஒரு மாதம் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஒரு மென்பொருளை ஒருவருக்கு விற்பனை செய்வதன் மூலம் அவருக்கு ரூ.500 கிடைத்து உள்ளது. மாதம் அவர் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த மென்பொருளை விற்பனை செய்து வந்து உள்ளார். இவர் இந்த தொழிலை கடந்த 2012-ம் ஆண்டு முதல் செய்து வருகின்றார்.
மேலும் சிலரை தேடி வருகின்றோம்
இது குறித்து குர்லா, தாதர், ஜோத்பூர் ஆகிய இடங்களில் இவர் மீது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த மென்பொருளை பயன்படுத்தி தனியார் ஆன்லைன் பதிவு கடைகளில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் நேரம் தொடங்கியதும் இந்த போலி மென்பொருளை பயன்படுத்தி ரெயில்வே மென்பொருளில் ஊடுருவி பொதுமக்கள் டிக்கெட் எடுக்கும் முன்பு அவர்கள் எடுத்து விடுகின்றனர்.
இதனால் ரெயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படவில்லை என்றாலும், தட்கல் டிக்கெட்டை கூடுதல் விலை கொடுத்து வாங்குவதால் பொதுமக்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. சாதாரண மக்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் செய்கிறது. இவரை போல் பலர் உள்ளனர்.
மேலும் பலருக்கு தொடர்பு
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை தேடி வருகின்றோம்'' என்றார்.
பின்னர் கைது செய்த ஷம்ஷேர் ஆலத்ைத போலீசார் வேலூா் கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர்.