நடுரோட்டில் சப்-கலெக்டரிடம் வாக்குவாதம் செய்தவர் கைது

Update: 2023-07-04 18:45 GMT

கலசபாக்கம்

மணல் அள்ளியதை கண்டித்த சப்-கலெக்டரிடம் நடுரோட்டில் வாக்குவாதம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மணல் அள்ளி சென்றனர்

கலசபாக்கம் பகுதியில் பல்வேறு புகார் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி நேற்று வில்வாரணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போதுவழியில் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் செய்யாற்றில் இருந்து மணலை மூட்டை கட்டி தலையில் சுமந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காரை நிறுத்திய சப்-கலெக்டர் தனலட்சுமி, அவர்களிடம் ''சட்டத்திற்கு புறம்பாக ஆற்று மணல் எடுக்கிறீர்கள். இது நியாயமா? என்று கேட்டார்.

அப்போது பெண்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. எங்களை வேலை வாங்கும் பசொல்லித் தான் இதை செய்தோம் என்று பூண்டி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரின் பெயரை கூறினர்.

இதையடுத்து பாஸ்கரை அங்கு வரவழைத்து சப்-கலெக்டர் தனலட்சுமி கேள்வி எழுப்பினார்.

வாக்குவாதம்

அதற்கு அவர், ''மணல் அள்ளுவது நான் இல்லை. இந்த தாலுகாவில் உள்ள பலதரப்பட்டவர்கள் செய்கிறார்கள். நான் ஒன்றும் பொக்லைன் எந்திரம் வைத்து டிராக்டரில் மணல் அள்ளவில்லை. பெண்களை வைத்து தலைச்சுமையாகத்தான் எடுத்தேன்'' என்று கூறினார்

அப்போது கோபம் அடைந்த சப்-கலெக்டர்,'' மணல் அள்ளுவதே தவறு. இதில் டிராக்டர் வைத்து அள்ள வேண்டுமா. இங்கு இருக்கும் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை. சரியான முறையில் பணி மேற்கொண்டு இருந்தால் இவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டார்கள்'' என்று தாசில்தார் ராஜராஜேஸ்வரியை பார்த்து கேள்வி எழுப்பினார்.இதன் பின்னர் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, கலசபாக்கம் போலீசில் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மீது, சப்- கலெக்டரை ஒருமையில் பேசியதாகவும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் பாஸ்கரனை கைது செய்தனர்.நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags:    

மேலும் செய்திகள்