சூரமங்கலம்
வட மாநிலங்களில் இருந்து ரெயில்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று ரெயில்வே போலீசார் பாலமுருகன், இசையரசு, அசோக் குமார், முனுசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-13351) சோதனை நடத்தினர். இந்த சோதனையானது ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் முதல் சேலம் ரெயில் நிலையம் வரை நடைபெற்றது. ரெயில் சாமல்பட்டி வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகப்படும்படியான கைப்பேக் ஒன்று இருந்தது. அதில் 4 பண்டல்களில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைப்பேக்குக்கு அருகில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடனம்குசி பகுதியை சேர்ந்த முகமது மகன் முகமது அலி (வயது 24) என தெரியவந்தது. மேலும் கஞ்சா ரெயிலில் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். அதன்ேபரில் ரெயில்வே போலீசார் அவரை கைது செய்ததுடன் 7 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.