பழனியில் மின்வாரிய அதிகாரி வீட்டில் திருடியவர் கைது

பழனியில் மின்வாரிய அதிகாரி வீட்டில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-24 20:30 GMT

பழனி சண்முகபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 68). ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி. அவருடைய மனைவி காமாட்சி (62). ஓய்வுபெற்ற பேராசிரியை. இவர்களின் மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இந்நிலையில் தனது மகனை பார்க்க முடிவு செய்த பாலசுப்பிரமணியன், அதற்கான 'விசா' புதுப்பிப்பதற்காக கடந்த 18-ந்தேதி மனைவியுடன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்டு, பாலசுப்பிரமணியன் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து 9½ பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் (44) என்பவர் பாலசுப்பிரமணியன் வீட்டில் நகை, பணம் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுப்பிரமணியன் மீது திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்