பெண், பஸ் டிரைவரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே கடன் தவணை தொகை செலுத்தாத பெண், பஸ் டிரைவரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது40). இவர், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணம் கடன் வாங்கியுள்ளார். கடந்த 5 மாதங்களாக அவர் தவணை தொகை செலுத்தியுள்ளார். இந்த மாதத்திற்கான தவணை தொகையை அவர் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நிதி நிறுவன ஊழியர்கள் பூவரசன்(32), ஆறுமுகம்(37), ராஜ்குமார்(24), ஜீவா(24), பிரவீன் குமார், (26) ஆகிய 5 பேரும் சுமதியிடம் தகராறு செய்துள்ளனர். மாத தவணை தொகையை சிறிது நாட்களில் கட்டி விடுவதாக கூறியும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து சுமதியை தாக்கி உள்ளனர். இது குறித்து சுமதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல, கிருஷ்ணகிரி அருகே உள்ள பையப்பசெட்டி புதூரை சேர்ந்தவர் சீரப்பன் (53), அரசு பஸ் டிரைவர். இவர் நிதி நிறுவனத்தில் பணம் கடன் வாங்கியுள்ளார். இவர் மாத தவணை செலுத்த சென்றபோது கூடுதல் பணம் கேட்டு ஊழியர் ஆறுமுகம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.