கோா்ட்டு ஊழியரை அவமதித்த லாரி டிரைவர் கைது
சேந்தமங்கலம் அருகே கோா்ட்டு ஊழியரை அவமதித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுநராக பணியாற்றி வருபவர் ராமசாமி (வயது 58). இவர் நேற்று முன்தினம் சேந்தமங்கலம் அருகே உள்ள இருளப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவரான மாதேஸ்வரனுக்கு மகிளா கோர்ட்டு உத்தரவிட்ட பிடிவாரண்டை வழங்க அவரை தேடிச் சென்றார். அப்போது மாதேஸ்வரன் ராமசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி அவமதித்தார். மேலும் மாதேஸ்வரனின் மனைவி தாமரைச்செல்வி (33), தந்தை பழனிசாமி ஆகியோர் கோர்ட்டு ஊழியரான ராமசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ராமசாமி அந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லாரி டிரைவர் மாதேஸ்வரன் உள்பட அவரது மனைவி, தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதையடுத்து நேற்று லாரி டிரைவர் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.