மடிக்கணினிகள் திருடிய 4 பேர் கைது

ஓசூரில் மடிக்கணினிகள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-10 18:45 GMT

ஓசூர், டிச.11-

ஓசூர் அருகே குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் தினேஷ் (வயது31). சம்பவத்தன்று இவர் காரை, ஓசூர் வசந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி முன்பு நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். மீண்டும் காருக்கு திரும்பிய போது, கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மடிக்கணினி திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திருச்சி மாவட்டம் கல்லக்குடியை சேர்ந்த முரளி (34) மற்றும் அருண் (25) ஆகிய 2 பேரும் மடிக்கணினியை திருடியது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் கதிரவன் (37). அம்பத்தூரில் தங்கியுள்ள இவர் வேலை நிமித்தமாக ஓசூர் வந்தார். பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, அவர் வைத்திருந்த மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி பகுதியை சேர்ந்த கார்வண்ணன் (26), முருகானந்தம் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்