கடத்தூரில் பூ வியாபாரியிடம் கந்து வட்டி வசூலித்தவர் கைது
கடத்தூரில் பூ வியாபாரியிடம் கந்து வட்டி வசூலித்தவரை போலீசார் கைது செய்தனர்.
மொரப்பூர்:
கடத்தூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 58). இவர் கடத்தூரில் அம்பேத்கர் சிலை அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் புது ரெட்டியூர் பகுதியை சேர்ந்த அங்கப்பன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அப்போதே அதற்கான வட்டி தொகையாக ரூ.4.500 பிடித்து கொண்டு மீதம் ரூ.25 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார். இந்த தொகையை நாளொன்றுக்கு ரூ.300 வீதம் 100 நாட்கள் கட்ட வேண்டும் என அங்கப்பன் கூறியுள்ளார். அதன்படி வீரபத்திரன் கடந்த 5-ந் தேதி வரை தினமும் பணம் கட்டி வந்துள்ளார். அதன்பிறகு பூ வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடந்த 5 நாட்களாக வீரபத்திரன் பணம் கட்டாமல் இருந்துள்ளார். இதனால் அங்கப்பன் வீரபத்திரனின் பூக்கடைக்கு சென்று பணம் ஏன் கட்டவில்லை என கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரபத்திரன் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் வழக்குப்பதிவு செய்து அங்கப்பனை கைது செய்தார்.