கஞ்சா, மது விற்ற 32 பேர் கைது

Update: 2023-07-01 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற 32 பேர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

தர்மபுரி மாவட்டத்தில் குற்ற செயல்களை கண்காணித்து தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி இயக்கப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் வாகனங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறதா?, குற்ற சம்பவங்களில் ஈடுபட யாராவது ஆயுதங்களை எடுத்துச் செல்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இதே ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுதல், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல் ஆகிய விதி மீறல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

32 பேர் கைது

இந்த வாகன சோதனையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர்கள் மற்றும் கஞ்சா விற்ற 32 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்