பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயற்சி:ரூ.35 லட்சம் குட்கா லாரியுடன் பறிமுதல்டிரைவர் கைது

Update: 2023-06-18 19:00 GMT

காவேரிப்பட்டணம்:

பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு காவேரிப்பட்டணம் வழியாக கடத்த முயன்ற ரூ.35 லட்சம் மதிப்பிலான குட்காவை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் காவேரிப்பட்டணம் அருகே பொம்மசந்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர்.

கைது

அந்த லாரியில் 3 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்டவை இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.34 லட்சத்து 23 ஆயிரத்து 800 ஆகும். விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெ.பி. நகரில் இருந்து கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சேலம் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு குட்கா பொருட்களை லாரியில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா கடத்தியதாக திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா சிறுவள்ளூர் கருணிகர் தெருவை சேர்ந்த கணேஷ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியுடன் ரூ.34 லட்சத்து 23 ஆயிரத்து 800 மதிப்பிலான குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்